தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது உலாமாக்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, பிப்.2-
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தினருக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் ஆட்சி
தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் உலாமாக்கள் மாநாடு நேற்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர்மொய்தீன் எம்.பி. தலைமையில் நடந்தது. மாநாட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இருக்கக்கூடிய உறவு, தொப்புள் கொடி உறவாக எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பலரும் இங்கே கூறினார்கள். நானும் அதைத்தான் வழிமொழிய விரும்புகிறேன்.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய சிலர், குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆட்சியை விமர்சனம் செய்கின்ற போதெல்லாம் இது மைனாரிட்டி ஆட்சி என்று கூறிவருகிறார். இதனை முதல்-அமைச்சர் குறிப்பிடுகிற போது இது மைனாரிட்டி ஆட்சி தான், சிறுபான்மையினருக்காக இருக்கக்கூடிய ஆட்சிதான் என்றார்.
நிறைவேற்ற பாடுபடுவேன்
சிறுபான்மையினர் உரிமைகளை பெற இந்த மாநாடு நடைபெற்று, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கருணாநிதி தலைமையில் நடைபெறுகிற ஆட்சி. தீர்மானம் போட்டு எடுத்து வந்தால் தான் இந்த அரசு நிறைவேற்றும் என்பதல்ல. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கிற அரசு, இந்த அரசு.
இந்த தீர்மானங்களை பொறுத்தவரையில் உங்கள் உணர்வோடு நானும் உரிமையுடன் முதல்-அமைச்சரிடம் முறையாக எடுத்துச்சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில் உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன்.
முஸ்லிம்களுக்கு ஆற்றியவை
தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த சமுதாயத்தினருக்காக என்னென்ன பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என எண்ணிப்பார்க்க வேண்டும். 69-ல் மிலாது நபிக்கு அரசு விடுமுறை விடப்பட்டது. 2001-ல் அதனை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ரத்து செய்தார். பின் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
73-ல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். 74-ல் அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது. 98-ல் ஓய்வூதியம் பெற்ற உலாமாக்கள் 2 ஆயிரம் பேராக இருந்ததை 2200 ஆக உயர்த்தினோம். 2008-ல் 2400 ஆக உயர்த்தியுள்ளோம். 98-ல் மதுரை வக்பு வாரிய கல்வி நிறுவனங்களை பராமரிக்க ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.
பராமரிப்புக்கு ரூ.40 லட்சம்
99-ல் வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்க ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது. ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பித்த அனைவருக்கும் அந்த வசதியை செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. 2000-ல் உருது அகாடமி தொடங்கப்பட்டது. 2001-ல் காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. 2007-ல் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கால கட்டங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதி எண்ணிப்பார்க்க முடியாத எவ்வளவு சாதனைகளை சிறுபான்மை சமுதாயத்திற்காக நிறைவேற்றியிருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தட்டாமல் திறக்கும் அரசு, கேட்காமல் தருகிற அரசு இந்த அரசு. உங்கள் உரிமைகளுக்காக உங்களோடு இருந்து நானும் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
தீர்மானங்கள்
சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், உலாமா நல வாரியம் அமைக்க வேண்டும். உலாமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், மசூதிகள் கட்டவும், பழுதடைந்தவற்றை புதுப்பிக்கவும் அனுமதி வேண்டும். தர்கா, ஜியாரத் வழிமுறையில் நம்பிக்கை இல்லாதவர் வக்பு வாரிய தலைமை பொறுப்பில் இருப்பதும், அவர் சார்ந்த கொள்கை உடையவர்களை மசூதி நிர்வாகங்களில் திணிப்பதும் தமிழக முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இதற்கு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் சையது சத்தார், பொருளாளர் செய்யது அகமது, உலாமா சபை தலைவர் அப்துர் ரஹ்மான், தமிழக அரசு தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அïப், எம்.எல்.ஏ.க்கள் கலிலூர் ரஹ்மான், அப்துல் பாசித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.