மேலப்பாளையம் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: "பெண்கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்''
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
மேலப்பாளைம், பிப்.15-
"பெண் கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்'' என்று மேலப்பாளையம் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
மேலப்பாளையம் அன்னை ஆஜிரா பெண்கள் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா மற்றும் 5-ம் ஆண்டு தொடக்க விழா ஆகியன நேற்று காலையில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு தொழில் அதிபர் ஏ.அன்வர் உசேன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் எஸ்.கே.செய்யது அகமது வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிந்தியா ஜோன்ஸ் அறிமுக உரையாற்றினார்.
75 மாணவிகளுக்கு பட்டம்
விழாவில் 75 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி மிக முக்கியம். 21-ம் நூற்றாண்டு என்பது கல்வி நூற்றாண்டாகவே இருக்கும். எனவே ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு வரும் கல்வி கற்க வேண்டியது அவசியம். குறிப்பாக பெண் கல்வியை ஒவ்வொரு பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும். தங்களுடைய பெண் குழந்தையை புறக்கணிக்காமல் ஆண்களுக்கு நிகராக அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றம்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண்கல்வியின் முன்னேற்றம். இதனை கருத்தில் கொண்டு பெண்கள் படிப்பதற்கு தடை போடாமல் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவர்களை படிக்க வைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாய கடமையாகும்.
பட்டம் பெறுகிற மாணவிகளும் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்காகவும் மனம் உகந்து உழைக்க வேண்டும். நம் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிற பிரதீபா பட்டீல் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதியான மேலப்பாளையத்தில் செயல்படுகிற இந்த கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா உசேன் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சென்னை கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.ஜெரினா, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவன கூட்டமைப்பு பொருளாளர் எஸ்.அகமது மீரான், மேலப்பாளைம் நகரசபை முன்னாள் தலைவர் எஸ்.முகமது அபுபக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.முகமது மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் எஸ்.கே.குதா முகமது நன்றி கூறினார்.