மும்பை தாக்குதல் சம்பவம்: குற்றவாளிகளை தண்டிப்பது உலக மக்களின் தார்மிகக் கடமை- மத்திய அமைச்சர் இ.அகமது
அலிகார் (உத்தரப் பிரதேசம்), ஜன. 27: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் தார்மிகக் கடமை என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது வலியுறுத்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக உள்ள அகமது, அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பேசியது:
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உலகில் எந்த நாடும் அடைக்கலம் தராது; தரக்கூடாது. மும்பையில் மனிதாபிமானத்துக்கு எதிராக நடந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டே தீரவேண்டும். இது சர்வதேச சமுதாயத்தின் தார்மிகக் கடமை.
அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமியத்தை கடைபிடிப்போர் இதை ஏற்றுக்கொள்வர். அப்பாவி மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது.
இஸ்லாம் சமுதாயத்தினர் மீதான நற்பெயரைக் கெடுக்க நாட்டில் சில பிரிவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அரசியல் லாபத்துக்காக அவர்கள் இதைச் செய்கின்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கை அவர்கள் உணரவேண்டும். போராடிய சுதந்திரத்தை பாதுகாப்பதில் முஸ்லிம்களுக்கும் பங்கு உண்டு என்றார்.
http://www.dinamani.com/news.asp?ID=DNH20090127121118&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls+%2D+No+Title&Title=Headlines