சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க விழாவில் பேராசிரியர் கேஎம்கே அறைகூவல்
சமூக நல்லிணக்கம் காக்க அபுதாபி அய்மான் சங்க முப்பெரும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில துணைத்தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறைகூவல் விடுத்தார்.
அபுதாபி அய்மான் சங்கம் மீலாது விழா, வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டலில் வியாழன் மாலை ( 15.05.2008 ) நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு அபுதாபி அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கி தலைமை தாங்கினார். துவக்கமாக மௌலவி முஹம்மது அஸ்லம் இறைவசனங்களை ஓத, அய்மான் சங்க மார்க்க செயலாளர் பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் தமிழில் விரிவுரையாற்றினார். பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இறைகீதம் பாடினார். செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் சங்க தலைவர் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் கடந்த 27 ஆண்டுகளாக அமீரகத் தலைநகர் அபுதாபியில் அய்மான் ஆற்றி வரும் சமூக மற்றும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சியில் அய்மான் மகளிர் கல்லூரி ஏற்படுத்தப்பட்டிருப்பது சங்கப்பணியில் ஒரு மைல்கல் என குறிப்பிட்டார். இத்தகைய பணிகளில் ஆரம்பம் தங்களை இணைத்துக் கொண்டவர்களை நினைவு கூர்ந்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் 'தளபதி' மௌலவி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அய்மான் சங்கப் பணிகளைப் பாராட்டினார். 1982 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மதிநா நகரில் மீலாது விழாவை சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களை வைத்து நடத்திய நிகழ்வினை நினைவு கூர்ந்தார். மீலாது விழாக்களில் பேசிய பலர் தமிழக முதல்வராக, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருவதைக் குறிப்பிட்டார்.
அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாஃபர் கடந்த எட்டு வருடங்களாக கல்லூரி செயல்பட்டு வருவதையும் இதுவரை 58 மாணவியர் பல்கலைக்கழக ரேங்க் பெற்றுள்ளதை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு போட்டிகளிலும் கல்லூரி மாணவியர் சாதனை புரிந்து வருவதை விவரித்தார்.
அய்மான் சங்க வெள்ளி விழா மலரை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட தொழிலதிபர் நோபிஸ் மரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.
விழாப் பேருரை நிகழ்த்திய பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் சமூக நல்லிணக்கம் பேண வலியுறுத்தினார். அய்மான் சங்கம் பல்வேறு சமூக மற்றும் கல்விப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தூர நோக்குடன் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அய்மான் சங்கம் இன்னும் பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வாழ்த்தினார். எதிர்வரும் ஜும் மாதம் சென்னையில் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் அமீரக மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுத்தார்.
பேராசிரியர் குளச்சல் ஷாகுல் ஹமீது அவர்கள் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், அய்மான் சங்க மலர் குறிஞ்சிப் பூ போல் அரிதாக அரிய பல தகவல்களைக் கொண்டு வெளி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அய்மான் சங்கம் திருக்குர்ஆனை தமிழ் மொழியில் ஒலி நாடாவாக ஆரம்ப காலத்திலேயே வெளியிட்டு சாதனை புரிந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மீலாது விழாக்களில் சகோதர சமுதாய அறிஞர்களும் அமீரக விழாவில் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொழிலதிபர் நோபிள் மரைன் சாகுல் ஹமீது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகள் படைக்க முடியும் என்றார்.
இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன், எஸ்.ஏ.சி. சாகுல் ஹமீது மற்றும் புரவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.