பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்
http://www.muslimleaguetn.com/news.asp
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.
நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.
சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.
மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.
பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.