Wednesday, September 24, 2008

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேச்சு


ஆம்பூர்,செப்.25-

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேசினார்.

பாராட்டு விழா

வேலூர் மாவட்ட தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.குணசேகரன், கரும்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை.கருணாகரன், பாராஞ்சி சி.எஸ்.ஐ. நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜேபஸ்சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், கொர்னேலியஸ் திவாகரன், லட்சுமிபாய், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் டி.மணிவண்ணன் வரவேற்று பேசினார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல்பாசித் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது

ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கு அதிகமாக இருக்க வேண்டும். சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் உள்ளது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது கல்வியின் மதிப்பு உயர்ந்துள்ளது.

மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களின் பெற்றோருக்கு தெரியபடுத்த வேண்டும். தாய், தந்தை உறவைவிட புனிதமான உறவான ஆசிரியர், மாணவன் உறவை மேம்படுத்தும் பணி ஆசிரியர்கள் கையில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேரணாம்பட்டு எம்.எல்.ஏ.சின்னசாமி, ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நகரசபை துணை தலைவர் தமிழரசிலட்சுமிகாந்தன், பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதிவில்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவாஜிராவ் நன்றி கூறினார்.