கருணாவின்-நீதியும் வாழ்க!
இருவேறு நபர்களின் எளிமையான ஆரம்பம். வறுமையில் இளமை, பொறுப்புமிக்க வாலிபம், கடமைமிக்க வாழ்க்கை. தலைவனின் வழிகாட்டுதலில் சிகரங்களைத் தொட்ட புரட்சியாளர்கள்.
நான் இங்கே குறிப்பிடுவது பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பியான நம் மாண்புமிகு முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி. மற்றொருவர் என் அருமைத் தந்தை என்று சொல்வதைவிட நம் சமுதாயத்தின் தலைவர் என்று சொல்வதில் பெருமையடையக்கூடிய கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் அன்புத் தம்பி-சிராஜுல்மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத்.
இந்த இரு வேறு நபர்களின் பிண்ணனியைப் பற்றி சரித்திரத்தைப் புரட்டி பார்க்கிறேன். முதலாமானவருடைய சரித்திரம் இவ்வாறாக ஆரம்பிக்கிறது. பேச்சின் மூலமாக மட்டும் அன்றி, எழுத்தின் மூலமாகவும் சேவையாற்ற பேரறிஞர் அண்ணா அவர் முடிவெடுத்தபோது காஞ்சியிலிருந்து ‘திராவிட நாடு’ என்ற பத்திரிக்கையை வெளியிடத் தொடங்கினார்கள். அதில் வெளிவந்த கட்டுரைகள், கதைகள், அவற்றை எழுதியவர்கள் மீதும் படிப்பவர்கள் மீதும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அதன் இரண்டாவது இதழில் ‘இளமை பலி’ என்ற கதை வந்திருந்தது. அதன் கதாசிரியர் பெயர் ஏற்கனவே அறிமுகமான ஒன்று. ஆனால் அவரை யாரும் சந்தித்தது இல்லை. ‘திராவிட நாடு’ ஆசிரியர் பேரறிஞர் அண்ணா கூட அதுவரை அவரை சந்தித்தது இல்லை. ஆனால் அந்த ‘இளமை பலி’ யின் ஆசிரியர் ஒரு நடுத்தர வயதினராக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவருக்கு.
பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாமர மக்களுக்கிடையேயும் பரப்புவதற்கு நாடகம் ஒரு சாதனம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கருதினார்கள். எனவே, அவரே கதை வசனம் எழுதியதுடன் அந்த நாடகங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கினார்கள். அப்படி, அவர் எழுதிய முதல் நாடகம் ‘சந்திரோதயம்’ என்பது. செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருவத்திபுரம் என்ற ஊரில் அந்த நாடகத்தின் ஒத்திகை நடந்தது. ஆனால் அதன் முதல் நிகழ்ச்சி திருவாருரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் காலத்தில் நாடகத்தில் இடைவெளி நேரத்தில் பொதுக்கூட்டம் போல நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு. ‘சந்திரோதயம்’ நாடகத்தின் இடைவெளி நேரத்தில் மேடையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்து அமர்ந்தார்.
ஒரு இளைஞர் கையிலே ஒரு பெரிய வாழ்த்து பத்திரத்தைத் தூக்கி வந்தார். அது ஏறத்தாழ அவர் உயரம் இருந்தது. அவர் தனது தனிப்பட்ட குரலிலே முத்திரைப் பதிப்பது போல கடகடவென அழகுத் தமிழில் வாசித்த வார்த்தைகள் கேட்டு அரங்கமே ‘கருணாநிதி, கருணாநிதி’ என கரவொலி எழுப்பியது. குழுமியிருந்த அனைவரையும் அவர் யார் என்று அரிய ஒருவருக்கொருவர் வினவ முற்பட்டனர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்படியே அந்த இளைஞரை ஆரத்தழுவி கட்டிப்பிடித்துக்கொண்டு அவரை விசாரித்தபோதுதான் ‘இளமை பலி’ கதாசிரியர் அவர்தான் என்ற உண்மை புரிந்தது.
அவர் இளமையைத் தெரிந்துக் கொண்ட அண்ணா அவர்கள், அவர் கல்வியைத் தொடர வேண்டுமென அறிவுரை கூறினார். ஆனால், அந்த எழுத்தாளர் தன்னுடைய இளமையைப் பலி கொடுத்து பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தைக் கட்டிக்காக்க முடிவு செய்தவர் என்பதை அண்ணா அவர்கள் பின்னால்தான் புரிந்துக் கொண்டார். முதலாமானவருடைய வரலாறு இப்படி ஆரம்பிக்கிறது என்றால் மற்றொருவரின் சரித்திரம் இவ்வாறு தொடங்குகிறது. 1944ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்ச்சியில் பார்வையாளராக நான் அடுத்து எழுதப் போகும் நபர் இடம் பெற்றிருந்தார். இப்போது அவரைப்பற்றி பார்ப்போம்.
1957 ஆம் ஆண்டு அந்தச் சந்திப்பு நடந்தது. ஈதுல் அதா-தியாகத் திருநாளான ‘பக்ரீத் பெருநாளில்’ அந்தச் சரித்திரம் தொடங்கியது. அதற்குமுன் பலமுறை ‘தர்ஜுமா டெலிவரி மேன்’ திருக்குர்ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதன் தர்ஜுமாவை சரிபார்த்துக் கொடுப்பதற்காக காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிபிடம் தன் தந்தை அல்லமா ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவியால் பல முறை அவர்களிடம் அனுப்பப்பட்டிருந்தாலும் இந்த தியாகத் திருநாளில் தான் சரித்திரம் தொடங்கியது.
அந்தச் சந்திப்பைப் பற்றி அவர்களுடைய வார்த்தைகளிலேயே இங்கே எழுத விரும்புகிறேன்.
ஈத் முபாரக் கூறிவிட்டு, முஸாபஹாவும் செய்துவிட்டு விடைபெற முற்பட்டேன். ‘என்ன அவசரம், இருங்கள்’ என்றார்கள். அவர்கள் காட்டிய இருக்கையில் மரியாதையுடன் அமர்ந்தேன். அவர்கள் கொஞ்ச நேரத்தில் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்கள்.
“ஏன் தம்பி! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாம் மேற்கொண்டுள்ள வழி சரியானதா? அல்லவா? உங்கள் மனதிற்கு எப்படிப்படுகிறது?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கு அது புதுமையான அனுபவம்!
தலைவரைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையெல்லாம் வாழ்ந்துவிட்ட பிறகு, மேலும் வளமாய் வாழ்க்கை வாழவேண்டுமானால் இந்தத் தலைவரைச் சுற்றி இருப்பதில் பிரயோஜனமில்லை எனக் கருதியவர்கள், விழியை வேறு வழியிலே செலுத்தியிருந்த நாட்கள் அவை. குப்புற விழுந்த குதிரை குழியையும் பறித்தது என்பது போல வேறு இயக்கத்திற்குத் தங்களை விலை பேசிக்கொண்டிருந்தவர்கள், லீக்கைக் கலைக்க வேண்டுமென்று கூற ஆரம்பித்து, கடைசியில் ‘அகில இந்திய லீக்’ என்ற போட்டி ஸ்தாபனத்தைத் தோற்றுவித்திருந்த நாட்கள் அவை.
அந்தப் பின்னணியில்தான், காயிதெமில்லத் அவர்கள் மனம் திறந்து பேசினார்கள்.
“இனி ஏதும் தமக்குக் கிடையாது என்று அலமலர்கிறார்களே! ஆண்டவனுடைய கஜானா வரண்டுவிட்டது என்று எண்ணுகிறார்கள்? அவன் நாடினால் எதுதான் கிடைக்காது?
எல்லாவிதமான பதவிகளும் நமக்கு உரிமையானவைதான். ஆனால் அதைப் பெறுவதிலே நமக்கு ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா? பதவி அந்தஸ்து பெறுவது எதற்காக? கண்ணியத்தை இழந்து பதவியைப் பெறுவதிலே அர்த்தமிருக்க முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரத்தை வாங்குவதா? நம்முடைய தோழர்களுக்கு இது புரிய வேண்டாமா? ஏன் தம்பி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் மனத்திற்கு நான் சொல்வது சரி என்று படுகிறதா?
இந்த ரீதியிலேயே அவர்கள் உட்கார்ந்து பேசினார்கள். நின்று கொண்டு பேசினார்கள். நடந்து கொண்டும் பேசினார்கள்.
இடைக்கிடையே ஈத் “முலாக்கத்துக்காக” (சந்திப்புக்காக) பலர் வருவார்கள்: வாழ்த்துவார்கள். வாழ்த்துப் பெறுவார்கள் போவார்கள். ஆனால் நானோ அந்த நாற்காலியிலேயே கண்டுண்டவன் போல அமர்ந்திருந்தேன். அவர்கள் பேசிக் கொண்டே இருக்கலாம்.
ஆனால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே என்னிடம் விடையையும் அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
என் முகத்தையும் பார்க்காமல், நடமாடிக் கொண்டே அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டிலே மக்களுக்கு உண்மையை உணர்த்த கேள்வி முறையைக் கையாண்ட சாக்ரட்டீஸ் நினைவுதான் எனக்கு வந்தது.
ஒரு சமுதாயம் பயந்து கோழையாகி விட்டது என்றால் அதற்கு வாழவே உரிமை இல்லை. வாழ்வது என்றால் மானத்தோடு வாழ்வதற்குத்தான் வாழ்க்கை என்று சொல்லப்படும் மானமிழந்த வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? தகுதிகள் வேண்டுமென்றால் திறமை மாத்திரம் இருந்தால் போதுமா? தியாகம் செய்யும் மனப்பான்மையும் வேண்டும். தியாகப் போக்குத்தான் மேலான பதவிகளைத் தேடித்தரும், அப்படித்தான்.
இந்தப் பெருநாள் தான் என்ன? அந்த மகாப் பெரிய தீர்க்கதரிசிகளான நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடையவும், அவர்களுடைய மைந்தராகிய நபி இஸ்மாயில் (அலை) அவர்களுடையவும் தியாகத்தை நினைவூட்டுவதாகத்தானே அமைந்திருக்கிறது.
இறைவனின் கட்டளை என்பதற்காக நாட்டைத் துறந்தார்கள்; ஊரைத் துறந்தார்கள்.
குடும்பத்தாரைத் துறந்தார்கள் நம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
அவர்களுடைய மைந்தர் இஸ்மாயிலோ, அவர் கழுத்தை அறுத்துப் பலியிட முற்பட்டபோது-அது இறைவனுடைய கட்டளையானால் அப்படியே செய்யுங்கள்-என்று தலையைக் குனிந்து கொடுத்தார்கள். இறுதியில் என்ன ஆனது? அல்லாஹுத்த ஆலா அவர்களுடைய தியாக உள்ளத்தை அங்கீகரித்து மனிதர்களுக்குத் தலைவர்களாக்கினான். உலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்கள் அவர்களுக்கு ஸலவாத்து (வாழ்த்து) கூறும் பாக்கியத்தைக் கொடுத்தான். இவையெல்லாம் தியாகத்தால் கிடைத்தது அல்லவா?
இப்படியாக அவர்கள கேள்வி உரைகள் விரிந்தன. அதிலே அரசியல் விதானம் மட்டுமல்ல, ஆயிரம் ஆயிரம் பொருள்களும் தெரிந்தன. இடையே மூன்று முறை அவர்களுடைய திருக்கரத்தாலேயே ஏந்தி வந்த தேநீரைக் குடித்தேன். இரவு 11 மணியாகி விட்டது. பகல் சமைத்த எளிய உணவு எனக்குப் பரிமாற்றப்பட்டது. அதன் பிறகு விடை பெற்றேன். அந்தக் காலத்தில் இரவு 10 மணிக்குமேல் பஸ் போக்குவரத்து இல்லை. டாக்ஸிகள் அதிகம் ஓடுவதில்லை. ஓடினாலும் என் கையில் காசு இல்லை.
கையால் இழுக்கும் ரிக்ஷாக்கள்தான் அதிகம். நாலைந்து ரிக்ஷாக்காரர்கள் துரத்தினார்கள். நான் நடந்தேன், சில சந்தர்ப்பங்களில் மெதுவாக ஓடவும் செய்தேன்.
என், சிந்தனைத் திரையில், நடந்த நிகழ்ச்சிகள் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தன. இடையிடையே வந்த அனைவரையும், வாழ்த்துமட்டும் கூறி வழியனுப்பி விட்டு, என்னிடம் இந்தியாவிலேயே முக்கியமான அந்த மனிதர்-எட்டுமணி நேரங்களுக்கு மேல் பேச வேண்டிய காரணமென்ன? என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார்? அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னென்ன பதில் சொல்லியிருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தேன்.
சமுதாயத்தைக் காக்க-ஒரு சிலராவது தியாகம் செய்தாக வேண்டும். அந்த ஒரு சிலரில் நானும் ஒருவனாக ஏன் இருக்கக் கூடாது? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அன்று அவர்களிடமிருந்து விடைபெறும் போது கையைப் பிடித்ததை, இதற்காக பை அத் செய்தாகவே உணர்ந்தேன்.
அதன் பிறகு அடுத்த பதினைந்தாண்டுகள் அவர்களின் இறுதி மூச்சு ஒடுங்கும் வரையிலே அவர்களின் நிழலாக இருந்தேன், குரலாக ஒலித்தேன். செயலாகத் திகழ்ந்தேன்.
அவர்கள் கடந்து சென்ற பாதையில் நடந்து கொண்டே இருக்கிறேன்......
இந்த வார்த்தைகள் தலைவர் சிராஜுல்மில்லத் அப்துல் சமது அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தை சந்தித்த சரித்திரத்தை விளக்கிய வார்த்தைகள்.
1944ல் திருவாருரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலைஞர் கருணாநிதியை ஆரத் தழுவி ஊக்குவித்ததைப் பார்த்த நேரடி பார்வையாளர்களில் சிராஜுல்மில்லத் அப்துல் சமது அவர்கள் இடம்பெற்றிருந்தார். அண்ணாவின் அந்த அன்புத் தழுவலில் இருந்து கலைஞர் தம்மை ஒருபோதும் விடுவித்துக் கொள்ளவே இல்லை. அந்த அன்பின் பிணைப்பு அரசியல் பிணைப்பாக அவருடைய அரசியல் வாரிசாக அன்றே அவரை ஆக்கிவிட்டது என்பதை இன்றும் உணரமுடிகிறது.
அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பிகளிலே ஆற்றல் மறவராக அன்றே கணிக்கப்பட்டவர் கலைஞர். ‘கழகத்தின் நிதி-கருணாநிதி’ என்று அண்ணா அவர்களே பெருமிதப்பட்டது உண்டு. தம் அரிய உழைப்பால், எடுப்பான பேச்சால், மிடுக்கான தமிழ் நடையால் லட்சோப லட்சம் மக்களை கழகத்தின் வீரர்களாக சேர்த்தவர் கலைஞர். இன்று தன் 86வது வயதில் இந்திய அரசியலில் மிக வலிமை வாய்ந்த முதலமைச்சராக விளங்குகிறார் டாக்டர் கலைஞர். அதுமட்டுமல்ல இந்திய நாட்டில் தோழமை கூட்டணி ஆட்சியின் முன்னோடி தலைவராக சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார் டாக்டர். கலைஞர்.
அதேபோல் தான் வாழ்ந்த காலம் வரை தான் சார்ந்த சமுதாயம் மட்டுமல்லாது பிற சிறுபான்மையினரும் உரிமைப்பெற்று வாழ்ந்திட தன் தலைவனின் சொல்லை ஏற்று தியாகச் சீலராக வாழ்ந்து காட்டியவர் தலைவர் சிராஜுல்மில்லத். ‘உரிமைகளைக் கேள், சலுகைகள் கேட்காதே, சலுகைகள் கேட்கும் சமுதாயத்திற்கு மானம் இருக்காது’ என கோஷமிட்டவர் சிராஜுல்மில்லத். தான் வாழ்ந்த காலம் வரை அவர் உண்டாக்கி வைத்திருந்த நட்புறவை என்றைக்கும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெறுவது முதல் அவர்களின் ஒட்டுமொத்த கண்ணியத்தை பாதுகாப்பதில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தைப் போலவே தன் வாழ்நாளின் கடைசி காலம் கட்டிக்காத்தார் சிராஜுல்மில்லத்.
பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி டாக்டர் கலைஞர் அவர்களும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் நிழலாக திகழ்ந்த சிராஜுல்மில்லத் அவர்களும் தங்களின் தலைவர்களுக்கொப்ப தாங்கள் சார்ந்த இயக்கங்களை வழிநடத்தினார்கள். திராவிட முன்னேற்ற கழகமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் இரட்டைச் குழல் துப்பாக்கி என நாடு போற்றும் வண்ணம் தங்களின் அரசியல் சேவையை நாட்டுக்கு அர்பணித்தனர் என்பது சரித்திரம்.
இன்றைக்கு சிராஜுல்மில்லத் நம்மைவிட்டு பிரிந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களின் நினைவாக அவர்களின் 84வது பிறந்தநாளை சமுக நல்லிணக்க விழாவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டாடும் இத்தருணத்தில் தன் நண்பரின் நட்புக்கு கண்ணியப்படுத்தும் வகையில் அதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொள்கிறார்.
‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ எனவும் ‘சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என கொள்கையுடன் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார் டாக்டர் கலைஞர் அவர்கள்.
‘வன்முறைக்கு பணியவும் மாட்டோம், வன்முறைக்கு துணியவுமாட்டோம்’ எனவும் இறைவனை வணங்கி வாழ்வோம், இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம், அனைவரோடு இணங்கி வாழ்வோம்’ என தன் வாழ்நாளில் வாழ்ந்துக்காட்டியதோடு மட்டுமல்லாது தன் சமுதாயத் தம்பிகளுக்கு இன்றைக்கு நம் மத்தியில் இல்லாவிட்டாலும் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறார் தலைவர் சிராஜுல்மில்லத் அப்துல் சமது அவர்கள்.
‘சமதின்-சமத்துவம் வாழ்க!
கருணாவின்-நீதி வாழ்க!
திராவிடம் வாழ்க! லீக் வாழ்க!
இந்த இரு நண்பர்களின் வாழ்க்கைச் சரித்திரம் இவ்விரு அரசியல் இயக்கங்களின் அரசியல் வரலாறு இவைகளை இன்றைய தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதைச் செவ்வன செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் வழிவகுப்பானாக எனக் கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
தங்களன்புள்ள
பாத்திமா முசப்பர்
Noohu Sahib Salih
dateWed, Oct 7, 2009 at 4:33 PM
subjectRe: சமதின்-சமத்துவமும் வாழ்க!
Dear Brother,
Very Nice Article.Each and every muslims should read and follow the food prints of our beloved laders who were dedicated thier whole life for the welfare of our ummah and left this great Organisation, Indian Union Muslim League for the upliftment of our community particularly for the downtrodden,uneducated and poor generation.This message should be taken to the younger generation.Insha Allah.Hail Muslim Leaque Leaders.
Regards.
Noohu Sahib
Quaidemillath Forum-UAE.