தாய்த்திரு இந்திய நாட்டின் சுதந்திர தின மணி விழாவை நாடெங்கிலுமுள்ள
நூறு கோடி இந்திய மக்கள் உவகை பொங்க கோலாகலமாக கொண்டாடி வரும்
மகிழ்ச்சியான வேளையில்-
பா.ஜ.க. மூத்தத் தலைவர் – முன்னாள் வெளியுறவு அமைச்சர்
திருமிகு.ஜஸ்வந்த்சிங் அவர்களால் எழுதப்பட்ட “ஜின்னா-இந்தியப் பிரிவினை-
சுதந்திரம்” என்ற நூலை 17-08-2009 ந்தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழா நிறைவுகூட பெற்றிருக்காது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க
பாசிஸ்டு கூடாரங்களில் இந்நூல் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.
நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு தொண்டாற்றியதால் மூத்தத்
தலைவராக மதிக்கப் பட்டு வந்த ஜஸ்வந்த்சிங் நொடிப்பொழுதில் கட்சிக்கு
துரோகம் செய்தார்- கட்டுப்பாட்டை மீறினார்- கட்சியின் லட்சியத்தை
சிதைத்துவிட்டார் என்று குற்றம் சுமத்துப்பட்டு, அவரை கட்சியிலிருந்து
நீக்கியதற்கு, பா.ஜ.க கூறியிருக்கும் காரணம், “முகம்மது அலி ஜின்னாவை
அளவுக்கு மீறி பாராட்டி தனது நூலில் ஜஸ்வந்த்சிங் எழுதிவிட்டார்
என்பதுதான்.
முகம்மது அலி ஜின்னாவை தான் பெரிதும் மதிக்கிறேன் இந்திய
சுத்ந்திரத்திற்காக போராடிஅ விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு
அரும்பாடுபட்டவர், முகம்மது அலி ஜின்னா போற்றுதலுக்குறிய இந்தியக்
குடிமகன் என்று காந்திஜியால் புகழப்பட்டவர். இந்திய முஸ்லீம்களின்
அரசியல் சாசன உரிமைகளை மீட்டுத்தரும் போராட்டத்தில் பெரும் பங்கு
வகித்தவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்ட மதச்சார்பற்ற தலைவர்
முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா மட்டும்
காரணமில்லை, நேருஜியும்- சர்தார் வல்லபாய் படேலும்தான் முதல்
முக்கியமானவர்கள். ஆனால் ஜின்னாவை மோசமானவர்- பிரிவினைவாதியாக
இந்தியாவில் சித்தரித்து காட்டிவிட்டார்கள். ஜஸ்வந்த்சிங் தனது நூலில்
ஜின்னா குறித்து எழுதியிருக்கும் கருத்துக்கள், அளவுக்கு மீறிய பாராட்டு
என்றோ, புகழாறம் என்றோ யாரும் கூறிடமாட்டார்.
பா.ஜ.க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி 2005ம் ஆண்டு
பாகிஸ்தானுக்கு- தான் பிறந்த சொந்த ஊரை பார்ப்பதற்காக ஆர்வமாக சிந்து
மாநிலத்திற்கு சென்றபோது முதலில் கராச்சியில் இருக்கும் “காயிதே ஆஜம்”
முகம்மதலி ஜின்னா சமாதிக்கு சென்று நமஸ்காரம் செய்து, மலர்வளையம் சூட்டி
மரியாதை செய்த பிறகுதான் சிந்து மாநில பயணம் மேற்கொண்டார். உலகறிய
ஜின்னாவை பாராட்டிப் புகழ்ந்து பேசினார்.
“முகம்மதலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர், தான் கொண்ட லட்சியத்தில்
வெற்றிவாகை சூடி, தனக்கென புகழ்வ வரலாற்றை உருவாக்கிக்கொண்ட மாபெரும்
தலைவராவார்” என எல்.கே.அத்வானி பாராட்டியதை விட ஜஸ்வந்த்சிங் ஒன்றும்
அதிகம் பாராட்டவில்லை. மாறாக ஜின்னா அரசியலில் எடுத்த தவறான முடிவுகளை
கண்டித்தும் எழுதியிருப்பது நூலை முழுமையாக படிக்கும்போது புரிந்துகொள்ள
முடியும்.
கடந்த அறுபதாண்டுகளில் பாகிஸ்தானின் பிரிவினைக் குறித்து
வரலாற்றாசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கில் நூல்கள்
எழுதியிருக்கிறார்கள்.பாகிஸ்தான் பிரிவினைக்கு நேருஜியும், வல்லபாய்
படேலும், காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையும்தான் ஜின்னாவை
பாகிஸ்தான் பிரிவினையின் பக்கம் தள்ளிவிட்டது என்று சாட்சி
பகர்ந்துள்ளார்கள்.
பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தரக் கூடாது என்று
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம்
ஆசாத் அரும்பாடுபட்டார். காந்திஜி, படேல், நேருஜி பாகிஸ்தான் பிரித்துதர
கடைசிவரை பிடிவாதமாகவே இருந்தார்கள். இதை தெள்ளத்தெளிவாக “இந்தியா
சுதந்திரம் அடைகிறது” என்ற தனது நூலில் மவுலானா அபுல்கலாம் ஆசாத்
குறிப்பிடும் போது, காந்திஜி நாட்டின் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு
காட்டி வந்தார். என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் பிரிக்க வேண்டும்
என்று கூறிவந்த காந்திஜியை வல்லபாய் படேல் எப்படித்தான் நாடு பிரிக்க
ஒப்புக்கொள்ளச்செய்தார். இது எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும்
இருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு காட்டிவந்த
நேருஜியும் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார். நேருஜியை ஒப்புக்கொள்ளச்
செய்ததில் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திற்க்கு பெரும்பங்கு இருந்ததாக
விரிவாக குறிப்பிடுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு ஜஸ்வந்த்சிங் ஜின்னாவை பாராட்டியது குற்றமாக
தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் சென்று வானளாவ ஜின்னாவை புகழ்ந்துவிட்டு
வந்த அத்வானி ஏன்? குற்றமாக கருதவில்லை, ஜஸ்வந்த்சிங் மீது மட்டும் ஏன்?
இந்த பாய்ச்சல், கட்சியிலிருந்து நீக்கம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்,
நூலுக்கு தடை கோரிக்கை ஏன்?. இத்தனை கடும் எதிர்ப்புக்கு ஜஸ்வந்த்சிங்
செய்த தவறு என்ன? முஸ்லீம்களுக்கு ஆதரவாக தனது நூலில்
எழுதியிருப்பதுதான். ஜஸ்வந்த்சிங் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு செய்த
பெருங்குற்றம். அதனால்தான் அவர் துரோகியாக மாறிவிட்டார்.
நாடு சுதந்திரம் பெற்ற அகஸ்டு 15 ந்தேதியிலிருந்து இன்று நரேந்திரமோடி
முதல்வராக இருக்கும் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் வரை முஸ்லீம்களுக்கு
எதிராக தூண்டிவிடப்பட்ட தொடர் கலவரங்கள், முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட
கொடுமைகள் குறித்து பொத்தாம் பொதுவாக விமர்சித்து முஸ்லீம்களுக்கு ஆதரவு
காட்டுவதுபோல் ஜஸ்வந்த்சிங் தனது நூலில் எழுதியிருந்தால் ஆர்.எஸ்.எஸ்-
பா.ஜ.க வின் எதிர்தாக்குதல் அவர்மீது இந்த அளவுக்கு இருந்திருக்காது.
பெரும்பான்மை சகோதர இந்து மக்களிடையே முஸ்லீம்களுக்கெதிராக
வெறுப்புணர்ச்சியைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தும் விஷ ஆயுதம்
பாகிஸ்தான் பிரிவினையைக் கருவாகவும், ஜின்னாவை மையமாகவும் வைத்து நூல்
எழுதியதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு கடுங்கோபமும், ஆவேசமும்
ஏற்பட்டுவிட்டது. ஜஸ்வந்த்சிங் துரோகியாக மாறிவிட்டார். இராவணனாக
காட்சித்தருகிறார்.
பாகிஸ்தான் பிரிவினையை முகம்மதலி ஜின்னா மீது திணித்தவர்கள் யார்?
அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? என்று புதைக்கப்பட்டுவிட்ட உண்மைகளை
தோண்டி எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டாலொழிய, இந்திய
முஸ்லீம்களின் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுக்கான வழி பிறக்காது என்று
ஜஸ்வந்த்சிங் எண்ணியிருக்கக்கூடும். அதனால்தான் பிரிவினைக்கு யார்..
யார்? காரணம் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு உண்மைகளை இந்திய மக்கள் முன்
தனது நூலின் மூலமாக எடுத்து வைத்துள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து குஜராத் கலவரம் வரை கடந்த
அறுபதாண்டுகளில் லட்சக்கணக்கில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு
வந்ததும், கோடானுகோடி உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையானதும்,
பாபர் மசூதி உள்பட நூற்றுக்கணக்கில் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டதும்,
இரண்டாம்தர குடிமக்களாக கடைகோடிக்குத் தள்ளப்பட்டதும், பாகிஸ்தான்
பிரிவினைக்கு காரணமானவர்கள் என்றும் வீண்பழி சுமத்தி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க
நடத்திவரும் நாசகார பாசிஸ்டுகளின் தூண்டுதல்தான் முக்கியக் காரணம்
என்பதை-
பாகிஸ்தான் பிரிவினைக்காக இந்திய முஸ்லீம்கள் தங்களது வாழ்க்கையை
இன்றுவரை விலையாக கொடுத்து வருகிறார்கள். என்று கோடிட்டு காட்டி, இந்திய
முஸ்லீம்களை மாற்றுலக மனிதர்களாகக் கருதி நடத்தி வருகிறார்கள்.
என்பதையும் முஸ்லீம்களின் கல்வி, பொருளாதார நிலை படுபாதாளத்தில்
தள்ளப்பட்டு, இரண்டாம்தர மூன்றாம்தர பிரஜைகளாக்கப்பட்ட அவலத்தை
எடுத்துக்காட்டியிருக்கிறார் ஜஸ்வந்த்சிங்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லீம்கள் சிறுபான்மையினராக
இருந்தும் – பெரும்பான்மை சகோதர சமுதாயத்திற்கு சரிநிகராக அளப்பரிய
தியாகங்கள் செய்த வரலற்றை இருட்டடிப்பு செய்து சகோதர சமுதாய மக்களின்
உள்ளங்களில் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும்- பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று
பழித்துக்கூறும் கோஷங்களை எழுப்பி – முஸ்லீம்களை நம்பிக்கையற்றவர்களாக –
தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வின் முஸ்லீம்
எதிர்ப்பு பிரச்சாரம் இன்றுவரை தொய்வில்லாமல் தொடர்ந்தே வருகிறது. இதற்கு
பக்கபலமாக விலைபோன ஒருசில செய்தி ஊடகங்களும் இயங்கி வருகின்றன.
அறுபதாண்டுகளாக முஸ்லீம்களுக்கு எதிராக தொடரும் பழிச்சொற்கள்,
அபாண்டங்கள்-அநியாயங்கள்-சுமத்தப்பட்டு வரும் துரோக குற்றச்சாட்டுகள்
ஏற்படுத்திவிட்ட வெதனைகளால்-வெந்தபுண்ணாக மாறிவிட்ட முஸ்லீம்களின் இதயக்
காயங்களை படம்பிடித்துக்காட்டி “இந்திய முஸ்லீம்களின் கண்களை
உற்றுப்பாருங்கள், இந்திய துரோகிகள் என்று சுமத்தப்பட்டு வரும் வீண்
பழியின் வேதனைகளை நீங்கள் காண்பீர்கள்” என்று கோடானு கோடி இந்திய மக்களை
சிந்திக்க வைத்து- நெஞ்சங்களை நெகிழச்செய்து, இந்தி- இந்துத்துவா ஆரிய இன
பாசிஸ்டுகளை தோலுரித்துக்காட்டி இருக்கிறார். தனது நூலில் ஜஸ்வந்த்சிங்
அவர்கள், அரசியலில் விழிப்புணர்வின்றி மாநிலத்திற்கு மாநிலம்
ஒற்றுமையற்று சிதறிக் கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தைக் குட்டுவதுபோல்
சிறப்புமிக்க இந்திய முஸ்லீம் சமுதாயம் பாகிஸ்தான் பிரிவினையால் இரண்டாக
பிளவுபட்டது. அதன்பிறகு பங்களாதேஷ் பிரிவினையால் மூன்றாக பிளவுபட்டு
சிதறியது.பாகிஸ்தான் பிரிவினை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்திய
முஸ்லீம்கள் உள்பட அனைத்து இந்திய மக்களும், அனைத்து வளங்களும் பெற்று
இருப்பார்கள். இன்று உலகத்திலேயே இந்திய நாடு வலிமைபெற்ற நாடாக
உயர்ந்திருக்கும் என்று வேதனையை வெளிப்படுத்தி, இந்து-முஸ்லீம்
ஒற்றுமையையும்- வளமான வாழ்வுக்கும்-வல்லரசு நாடு என்ற புகழுக்கும்
முட்டுக்கட்டை ஏற்படுத்திவிட்டதை சுட்டிக்காட்டி ஒற்றுமையின் அவசியத்தை
இந்திய முஸ்லீம்களுக்கு உணர்த்தி சிந்திக்க வைத்துள்ளார் ஜஸ்வந்த்சிங்
அவர்கள்.
“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது” “விட்டு கொடுத்து வாழ்வது” என்ற
உயரிய இந்திய பண்பாட்டு மரபுகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக “இந்திய மக்கள்
தேசிய சக்தியாக” உயர்ந்து நிற்க முடியும் என்பதை-
“உண்மையில் நம்முடைய கடந்த காலம், கடந்த காலத்திற்குள் போகவில்லை.
நம்முடைய கடந்த காலம் நமக்குமுன்னே தொடர்ந்து காட்சிதர வந்துபோகிறது.
நம்முடைய கடந்த காலம் நம்முன் தவிப்போடு காட்சித்தருகிறது. இதன் மூலம்
நாம் அனைவரும் படிப்பினை பெற வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,
இந்துக்கள், முஸ்லீம்கள், காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க – நாம் அனைவரும்
உலகத்திலேயே பழமையான, உயர்ந்த பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.” என்று
தொடக்க உரை எழுதி, பன்முக, இன மொழி, மதக் கலாச்சாரம் பேணும் இந்திய
சமூகங்களிடையே ஒற்றுமைக்கான சிந்தனைப் புரட்சியை தொடங்கி
வைத்திருக்கிறார். “ஜின்னா-இந்தியப் பிரிவினை, சுதந்திரம்” என்ற தனது
நூலின் வாயிலாக திரு.ஜஸ்வந்த்சிங் அவர்கள்.
அக்னி ஆயுதமான ஜஸ்வந்த்சிங் நூல் எங்கே தங்களை சுட்டெரித்துவிடும்
என்று கதிகலங்கிப்போன பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூடாரம் அவரை
கேவலப்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியது. அதன் மூலம் அவரை தனிமைப்
படுத்தி, அவர் வெளியிட்டக் கருத்துக்களை மூடி மறைத்துவிடலாம் என்று
போட்டக் கணக்கு “கிண்று வெட்ட பூதம் கிளம்பியது போன்று ஆகிவிட்டது.
ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம்,.
எல்.கே.அத்வானியின் அரசியல் ஆலோசகர்
சுதீந்திர குல்கர்னி,
முன்னால் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்கா,
பிரபல பத்திரிகையாளர் அருண்ஷோரி,
பிரபல பத்திரிகையாளர் டாக்டர்.வேத் பிரதாப் வேதிக்,
என்று வரிசையாக பாசிஸ்டு கூடாரத்திலிருந்து ஜஸ்வந்த்சிங்க்கு ஆதரவான
குரல்கள் ஒளிக்கத் தொடங்கிவிட்டது மட்டுமல்ல, நேற்றுவரை முகம்மதலி
ஜின்னாவை பிரிவினைவாதி- இந்தியாவை கூறுபோட்ட விரோதி என்றெல்லாம்
தூற்றினார்கள். இன்று விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு
பாடுபட்டவர், இந்தியாவின் தேசியத்தலைவராக போற்றிப் புகழவும்
ஆரம்பித்துவிட்டார்கள்.
உடலெல்லாம் முஸ்லீம் எதிர்ப்புக் கொண்ட ஜனசங்கத் தலைவர் பால்ராஜ் மதோக்
எழுதிய “தீனதயாள் உபாத்தியாயா முதல் இந்திராகாந்தி வரை” என்ற நூலையும்,
பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ். பழம்பெரும் தலைவர் எச்.வி.ஷேஷாத்ரி எழுதிய
“டிராஜிடி ஆப் பாகிஸ்தான்” என்ற நூல்களில் பாகிஸ்தான் பிரிவினைக்கு
ஜின்னா முக்கியக் காரணம்மல்ல என்பதையும், சர்தார் வல்லபாய் படேலும்
முக்கியக் காரணம் என்ற தகவல்கள் சான்றாக எடுத்துக்காட்டி
ஜஸ்வந்த்சிங்குக்கு பக்கபலம் சேர்த்து வருகிறார்கள். ராஜஸ்தான் முன்னாள்
முதல்வர் ஷெகவத்தும் அவருக்கு பேராதரவு தந்துள்ளார்.
அதுமட்டுமல்ல சிம்லாவில் கூடிய பா.ஜ.க தேசிய செயற்குழுவில் பா.ஜ.க
ஆட்சி செய்யும் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், போன்ற பா.ஜ.க
அரசுகள் நூலை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குஜராத் மாநில
அரசு மட்டும்தான் நூலை தடை செய்தது. ஆனால் கர்நாடகா, ம.பிரதேசம் போன்ற
அரசுகள் நூலுக்கு தடைவிதிக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டன. தற்போது
நூலுக்கு குஜராத் அரசு விதித்த தடை செல்லாது என்று உச்ச நீதி மன்றமும்
தீர்ப்பு சொல்லிவிட்டதால், நெருப்பை அள்ளி தன் தலையில்
கொட்டிக்கொண்டதுபோல் தவித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. “வினை விதைத்தவன்
வினை அறுப்பான்.”
-சின்ன ஷிப்லி